நடிகர் மன்சூர் அலிகானிடம் நாளை போலீஸ் விசாரணை

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் வழங்கியுள்ளனர்.

Nov 22, 2023 - 13:43
Nov 22, 2023 - 19:10
நடிகர் மன்சூர் அலிகானிடம் நாளை போலீஸ் விசாரணை

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாளை ஆஜராக போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

சென்னையில் சமீபத்தில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், லியோ படம் வெற்றி தொடர்பாக பேசினார்.அப்போது தனக்கு பழைய படங்களை போன்று வில்லன் கதாபாத்திரம் கிடைப்பதில்லை என்றும் கற்பழிப்பு காட்சிகள் போன்றவற்றை எடுப்பதில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

மேலும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.இந்த கருத்திற்கு நடிகை திரிஷா சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இதுகுறித்து நடிகர் சங்கம் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தது.இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.மன்சூர் அலிகானின் கருத்து அருவறுக்கத்தக்கது என்று நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “திரிஷா குறித்து பேசியதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. என்னிடம் உரிய விளக்கம் கேட்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் தவறாக எதையும் கூறவில்லை. திரைப்படங்களில் கற்பழிப்பு காட்சி குறித்துதான் பேசினேன். இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக தமிழ்நாடே உள்ளது என்று தெரிவித்தார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் உடன் நடிகர் மன்சூர் அலிகான் செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாளை நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் வழங்கியுள்ளனர். மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow