சேறும், சகதியுமான மண் சாலையில் நாற்று நட்டு போராட்டம்
இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய சாலைமறியல் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்
திருவாரூர் அருகே சேறும், சகதியுமான உள்ள மண் சாலையில் நாற்று நட்டு அப்பகுதி மக்கள் நடத்திய நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே குடவாசல் காப்பணாமங்கலம் நகர் பகுதியில் சுமார் 100க்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு , தனியார் நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வசித்து வரும் இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை நாட்களில் இங்குள்ள சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுவதால் நடந்து செல்ல முடியாததோடு, வாகனங்களிலும் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அவசர உதவிக்கு இந்த பகுதி வழியாக 108 ஆம்புலன்ஸ் கூட இயக்க முடியாத சூழலும் உள்ளது. வாடகை வாகனங்களும் சாலை முகப்போடு திரும்பி விடுகின்றனர்.
குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வீட்டிற்குள் வந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீட்டிலிருந்தும் நிம்மதியில்லாமல், வெளியே செல்லவும் வழியின்றி தவிக்க வேண்டியுள்ளது. கொசுக்களும் அதிகமாகி தொல்லை கொடுப்பதோடு, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களும் பரவத்தொடங்கியிருக்கிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் அந்த பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர் ஒன்று சேர்ந்து சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்பகுதி மக்களிடம் பேசினோம். “இந்த பகுதிக்கு முறையான சாலை வசதி கேட்டு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை என்பதே இல்லை. சேற்று சாலையில் நடந்து செல்ல முடியாமல் வயதானவர் முதல் குழந்தைகள் வரை பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். மழைநாளில் இந்த சாலை வயல்போல் மாறிவிடுகிறது என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்தவே நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்தினோம். இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய சாலைமறியல் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றனர் கோபத்துடன்.
இது குறித்து ஒன்றிய அதிகாரிகளோ, “வரும் நிதியாண்டில் இந்த சாலை போடப்பட்டுவிடும்.” என்றனர் ஒற்றை வரியில்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?