ஜிஎஸ்டி வரியல்ல.. வழிப்பறி.. செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா.. கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின் 

"ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜிஎஸ்டி வரியல்ல.. வழிப்பறி.."  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Apr 15, 2024 - 16:03
ஜிஎஸ்டி வரியல்ல.. வழிப்பறி.. செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா.. கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின் 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், " தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம் என்று ஒரே நாடு ஒரே வரி கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள் "  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow