கர்நாடகாவில் பாஜகவின் அரசியல் சதுரங்கம்... மோடி கேரண்டி வியூகத்தை உடைக்க போராடும் காங்கிரஸ்... கள நிலவரம் கலவரமா.?

கர்நாடகா அரசியல் களம் அனலடிக்க ஆரம்பித்திருக்கிறது. கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை, 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் வியூகத்தை உடைக்க காங்கிரஸ் கட்சி புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Apr 25, 2024 - 16:32
கர்நாடகாவில் பாஜகவின் அரசியல் சதுரங்கம்... மோடி கேரண்டி வியூகத்தை உடைக்க போராடும் காங்கிரஸ்... கள நிலவரம் கலவரமா.?


2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன் பாஜக காய் நகர்த்தி வரும் நிலையில், கடந்த முறை வென்ற இடங்களையாவது வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னிந்தியாவில் தேசிய கட்சிகளின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் மாநிலம் கர்நாடகா. இது, பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமரும் மாநிலம். மத்தியில் ஆட்சி அமைப்பதில் இம்மாநிலத்தின் 28 மக்களவைத் தொகுதிகளின் பங்கு அளப்பறியது.

கர்நாடகாவில், கடந்த 2019 தேர்தலில், பாஜக 25 இடங்களை கைப்பற்றி இருந்தது. இதுதான் அக்கட்சி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தால், 2009 - 41.63 சதவீதம், 2014 - 43.37 சதவீதம், 2019 - 51.74 சதவீதம் என பெற்றிருந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை 14 தொகுதிகளுக்கும், மே 7 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில், வெள்ளிக்கிழமை மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற 25 இடங்களை இம்முறை பாஜக வெல்வது கேள்விக்குறி தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள். இதில் 135 தொகுதிகள், 42.88 சதவிகித வாக்குகள் என, காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்திருந்தது.

அதன்பிறகு "5 கேரண்டிகள்" என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை ஆகியவை, பெண்கள், இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றன. இந்த விஷயங்கள் காங்கிரஸிற்கு சாதகமாக அமைந்துள்ளது. 

பாஜகவை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா தான், கர்நாடகா மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். இது சீனியர்கள் பலருக்கு வேப்பங்காயாக உள்ளது. அதற்குக் காரணம், இவர் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் தான் காரணம் என்கின்றனர். 

மக்களவைத் தேர்தலுக்காக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உள்ளே கொண்டு வந்தது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவற்றிலும் முக்கியமான பங்கை வகித்துள்ளார். இதிலும், சீனியர்களுக்கு அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. எனவே, விஜயேந்திராவின் தலைமையை அக்கட்சியினர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இது தேர்தல் களப் பணியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசிய போது, இஸ்லாமியர்களை குறிவைத்து பேசியதை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக மைனாரிட்டி வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் பக்கம் கூட சென்று விடாமல், அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு விழ வைப்பதற்காக வியூகம் அமைக்கப்படுகிறது. அதேசமயம், பாஜக தங்களது வாக்கு வங்கியை தக்கவைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. 

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு, ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரை, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? தேர்தல் தான். இவர்களின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் சரிந்து கொண்டே வந்துள்ளது. கடந்த முறை 7 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் அந்த ஒரு இடமும் கடினம் என்றாலும், பாஜகவின் வாக்கு வங்கி கைகொடுக்க வாய்ப்புள்ளது. 

இக்கட்சியின் பலம் என்பது ஒக்கலிகா சமூக வாக்குகள் தான். ஆனால், வாரிசு அரசியலை அடுத்தடுத்து கையிலெடுப்பது அந்த சமூகத்தினரிடமும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இம்முறை கூட, ஹாசனில் தேவகவுடா பேரன் போட்டியிடுகிறார். மாண்டியா தொகுதியில் குமாரசாமி களம் காண்கிறார். 

காங்கிரஸ் கட்சி கடந்த 2023ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றி, மக்களவைத் தேர்தலில் எந்தளவிற்கு கைகொடுக்கும் என்ற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர். ஏனெனில், அங்குள்ள சமூக ரீதியிலான வாக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். 

கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களாக ஒக்கலிகா 10 சதவீதம், லிங்காயத்து 10 சதவீதம், குருபாக்கள் 8 சதவீதம் உள்ளனர். இதில், ஒக்கலிகா வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸில், டி.கே சிவக்குமார் ஒக்கலிகா சமூகத்தின் முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். ஒக்கலிகா என்பதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் பகிரங்கமாகவே பேசி வருகிறார். இம்முறை ஒக்கலிகா சமூகத்தினர் பலருக்கு வாய்ப்பளித்து, டிகே சிவக்குமார் தீயாய் வேலை செய்து வருகிறார். இவர்களது வெற்றி உறுதியானால், முதலமைச்சர் நாற்காலிக்கு கூட டி.கே. சிவகுமார் காய் நகர்த்த வாய்ப்புள்ளது. 

அதே நேரத்தில், லிங்காயத்து சமூகத்தினர் தொடர்ச்சியாக பாஜக பக்கமே இருந்து வருகின்றனர். குருபா சமூகத்தினர் சித்தராமையாவின் செல்வாக்கு காரணமாக காங்கிரஸ் பக்கம் இருக்கின்றனர். இதுதவிர, எஸ்.சி சமூகத்தினரின் ஆதரவும் காங்கிரஸ் பக்கம் இருப்பதாக கூறுகின்றனர். 

வறட்சி நிதியை மத்திய அரசு முறையாக தருவதில்லை என்று தமிழகத்தின் ஸ்டைலில் சித்தராமையா செய்து வரும் பிரசாரமும் கவனத்தை பெற்று வருகிறது. கர்நாடகாவில் இடங்களை மொத்தமாக அள்ள பாஜக வியூகம் வகுத்தாலும், பலமுனை தாக்குதலால் ஒட்டுமொத்தமாக பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் 4ல் கர்நாடகாவில் காற்று யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow