திருமுருகாற்றுப்படை ஓர் எளிய அறிமுகம்- பாகம்; 2

திருமுருகாற்றுப் படை எனும் கந்தன் காவியத்தின் எளிய அறிமுகத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்..

திருமுருகாற்றுப்படை ஓர் எளிய அறிமுகம்- பாகம்; 2
திருமுருகாற்றுப் படை ஓர் எளிய அறிமுகம்

திருமுருகாற்றுப்படை ஓர் எளிய அறிமுகம்- பாகம்; 2

- அயப்பாக்கம் ஜெயக்குமார்

இதுவரை திருமுருக்காற்றுப்படையில் முதல் பத்து வரிகளை எளிமையாக வாசிப்போமா? திருமுருகாற்றுப் படை எனும் கந்தன் காவியத்தின் எளிய அறிமுகத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்…

திருப்பரங்குன்றம்:

’உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண்பா அங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி

உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்

செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை (5)’

ஓங்காரத்தின் உட்பொருளானது அ+உ+ம் என்பது மூன்றெழுத்தின் நடுநாயகமான உ-வை விநாயகர் துதி என்பார்கள்.  இவ்வெழுத்தை எழுதிய பின்பே எழுதுவது என்பது தைழ் புலவர்களின் மரபு. அதிலும், உலக என பொதுப்படையாக ஆரம்பிப்பது வழக்கம். 

உலகம் எனும் சொல் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதன் முன்னோடி. ‘உலகெலாம் உணர்ந்து…’ என்று தொடங்குவது பெரியபுராணம். ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்று தொடங்குவது கம்ப இராமாயணம். நக்கீரர் சுவாமிகளும் ’உலகம் உவப்ப…’ என்றே தொடங்குகிறார்.

உலகம் மகிழ்வுபெற (உவப்ப) வேண்டி வலதுபுறமாக சுற்றும் (வலன் ஏர்பு – ரைட் ரொட்டேஷன்)ம் முத்தீயினை ( திரி –மூன்று, தரு) உள்ளடக்கியவன் சூரிய பகவான். பலரும் புகழக்கூடியவன் சூரியன். சூரிய உதயமே நம் தமிழர்களின் நாள் துவக்கம் ஆகும். நள்ளிரவு என்பது தற்காலம் விளைந்தது. கடலின் மேல் தோன்றுவது போல் நமக்கு காட்சி தருகிறார். ஆனால், அவர் தோன்றி மறைவது இல்லை. நமது பூமிப்பந்துதான் தன்னைத் தானே சுற்று மறைந்துகொள்கிறது. ஓவற இமைக்கும் எனில் இடையூறு இல்லாத ஒளி என்று பொருள். எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் சூரிய ஒளியே என மங்களகரமாக ஆரம்பிக்கிறார். 

அடுத்த வரியில் இருந்தே முருகப்பெருமா னின் புகழ்பாட ஆரம்பிக்கிறார். ’உறுநர்’ என்றால் அபயம் என வருபவர்கள் என்று அர்த்தம். அவர்களை தாங்கக்கூடிய வலிமையான கால்களை (தாள்) உடையவர் என்று பொருள். பகைவர்கள் (செறுநர்) அழித்து (தேய்த்து) இடியைப்போல (செல்) தாக்கக்கூடிய பலமான கரங்களை (உறல் தடக்கை) உடையவர். எடுத்த எடுப்பிலேயே காக்கும் கடவுள் எனக் குறிப்பிடுகிறார். அடுத்த வரிகள் கீழே…

’மறுஇல் கற்பின் வாள்நுதழ் கணவன்

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை

வாள்போல் விசும்பில் வள்உறை சிதறித்

தலைப்பெயல் தலைஇய தன்நறுங் கானத்து

இருள்பட பொதுரிய பராரை மராஅத்து’ (10)

மறு(குற்றம்) இல்லாத கற்புடைய, ஒளி பொருந்திய (வாள் + நுதல்) நெற்றியை உடைய தேவயானியின் கணவர் என முருகப்பெருமானை நமகு அறிமுகம் செய்கிறார். ’மாசு மறு இல்லாத அழகு’  என்பது தற்காலம் நடைமுறையில் உள்ள சொல்லாடல். 

நக்கீரர் சுவாமிகள் மறு என்ற வார்த்தையை கற்போடு ஒப்பீடு செய்கிறார். எவ்வித குற்றத்திற்கும் ஆளாகாத மேற்பட்ட கற்பினை உடையவர் என்று பொருள்.  அப்பேற்பட்டவரின் அன்புக் கணவர் என்று எவ்வளவு உயர்வாக கூறுகிறார் பாருங்கள். மேலும், இது திருப்பரங்குன்றம் படலம்.  இங்குதான் இத்தேவியைப் பெருமான் மணந்துகொண்டார். ஆதலால் இத்தல மங்கையை முன்வைத்து நக்கீரர் சுவாமிகள் போற்றியுள்ளார்கள்.

கார்கோள் என்றா கடல் என்று பொருள். கடலில் இருந்து முகரப் பட்ட நீரானது கறுப்பு மேகமாகி (கமஞ்சூல்)  மழையாகப் பொழிய உருகொண்டது. அந்த கறுப்பு மேகத்தில் ஒரு வாள் வீசினாற்போல் (வாள்போழ்) மின்னல் தோன்றியது. அந்த மின்னல் மேகத்து நீரை பெரிய (வள்) துளிகளாகச் சிதறடித்தது. அதுவே மழை என்றாகப்பட்டது. அந்த மழை குறிஞ்சி நிலத்தின் முதல் மழை (தலைப்பெயல்) ஆயிற்று. இம்மழையை ஆதாரமாகக் கொண்டு மண்ணில் நிறைய பூக்கள் பூக்கின்றன. அதனால் மணம் வீசுகிறது. (தன் நறுந்). அந்தக் காடானது ஒரு ரம்மியம் பெறுகிறது. வனப்பும் பெறுகிறது. சூரியனுடைய கதிர்கள் உள்ளே போக முடியாதபடி அடர்ந்த வனத்துள் பகலிலேயே இருள் உண்டாகிறது என(இருள்பட பொதுளிய) வனத்தின் செழிப்பை  உரைக்கிறார். மரம் எனில் செங்கடம்பு மரம் பராரை எனில் அறுத்த அடி மரம் எனப் பொருள். மரத்தின் பெருத்த அடிவாரம் இருளிலும் ஓங்கி உயர்ந்த உச்சி சூரியனின் கதிரை அனுபவித்தபடி இருந்ததாம்.

‘உருள்பூந் தன்தார் புரளும் மார்பினன்

மால்வரை நிவந்தசேண் உயர் வெற்பில்

கிண்கிணி சுவைஇய ஒண்செஞ் சீரடிக்

கணைக்கால் வாங்கிய சுசுப்பிற் பணைத்தொள் 

கோபந்தன்ன தேயா பூந்துகிள்’ – (15)

இப்படி செழிப்பான் குறிஞ்சி நிலத்தின் சொந்தக்காரடாகிய முருகப்பெருமான்  உருளக்கூடிய  கடம்ப மலரை தன் மார்பில் புரளக்கூடிய வகையில் அணிவர். பூ! சரி. அதென்ன உருளும் பூ? கடம்ப மலர் என்று கூகுளில் போட்டு தேடிபாருங்கள். அழகான சிறிய பந்து போன்ற தோற்றமும்,  மேற்பரப்பில் (ஸ்பாஞ்சி)வெல்வெட் போன்ற அமைப்பும் கொண்டது. உருட்டிவிட்டால் உருண்டு செல்லும் அமைப்போடு கூடிய, தடிமனான, கெட்டியான பூ.  அதனால்தான் அதை ‘உருள் பூ; என்கிறார். ’தார்’ என்பது ஆண்கள் அணியும் மாலை. ‘கோதை’ என்பது பெண்கள் அனியும் மாலை. மார்பில் கடம்ப மாலையை அணிந்துள்ள அழகனைக் காண தேவலோகத்தில் இருந்து மகளிர் வருகின்றனர்.  பெரிய மலையின் (மால் வரை) உச்சி வரை  ஆங்குள்ள மூங்கில் போன்றவை செழித்து வளர்ந்துள்ளது. அந்த மலைக்கு வருகைபுரியும் தேவலோக மகளிர் காலில் கட்டியிருந்த  சலங்கை (கிண்கிணி) ஒலி எழுப்பியபடி வந்தனர். அழகான சிவந்த சிறிய பாதங்களுக்கு (ஒண்செஞ்சீறடி) மேலும் கிண்கிணி  வனப்பு மூட்டியது. திரட்சியான கால்களும் (கணைக்கால்). (கணை – திரட்சி)  உள்வாங்கிய இடுப்பையும் (நுசுப்பு – இடுப்பு) பருத்த தோள்களையும்  கொண்டிருந்தனர் அணங்கினர். அங்கங்களை வர்ணித்த நக்கீரர் சுவாமிகள் அடுத்ததாக அவர்கள் உடலைக் காத்த ஆடைகளுக்கு வருகிறார்.   

தொடரும்…


அயப்பாக்கம் ஜெயக்குமார்



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow