ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
ஸ்ரீபெரும்புதூரில் பாலம் கட்ட ஆய்வுப் பணி நடந்து வருகிறது.
![ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு](https://kumudam.com/uploads/images/202402/image_870x_65cb10ba86791.jpg)
ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் இடையே நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த பேருந்துகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செயல்பட்டு வருகின்றன. முதலில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன. பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் வடசென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு மாதவரத்தில் இருந்து 20 சதவீதம் பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்கள் மற்றும் முகூர்த்த நாள் ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்லப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூரில் அதிகமான உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதாகவும் கூறி இதனை சரி செய்ய புதிய திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "புதிய திட்டம் வகுக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், குறிப்பாக நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் பாலம் கட்ட ஆய்வுப் பணி நடந்து வருகிறது. 2 மாதங்களில் பாலப்பணிகள் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)