பெரம்பலூர் அருகே இரண்டே ஆண்டுகளில் தரைப்பாலம் சேதம்- அமைச்சர் தொகுதியின் அவல நிலை

தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் வழுக்கி விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Feb 13, 2024 - 11:13
Feb 13, 2024 - 11:13
பெரம்பலூர் அருகே இரண்டே ஆண்டுகளில் தரைப்பாலம் சேதம்- அமைச்சர் தொகுதியின் அவல நிலை

பெரம்பலூர் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்து 50-க்கும் மேற்பட்டோர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் இப்படியொரு நிலையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  நன்னை கிராம எல்லைக்கு உட்பட்ட  வைத்தியநாதபுரம் துணைமின் நிலையத்தில் இருந்து வ.அகரம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.89 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.

அப்போது அந்த சாலையில் 2 பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஒரு பாலம் உயர்மட்ட பாலமாகவும் மற்றொரு பாலம் தரைமட்டப் பாலமாகவும் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. தரைமட்ட பாலப்பாலத்துக்கான இடத்தில், உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்ததாரர் தரைப்பலமாக அமைத்து வேலையை முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தரைப்பாலத்தில் மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று காணப்படுகிறது. அதிகளவில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அந்த பாலம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பச்சை பாசை பிடித்து அதிக அளவில் காணப்படுவதால் பாலத்தை கடக்கும்போது வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.இதனால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கை, கால்கள் உடைந்து மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பரவாய் கிராமத்தில் இருந்து அகரம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரால் வழுக்கி விழுந்ததில் வாகனத்தை ஓட்டிய முதியவர் மற்றும் பின்னல் அமர்ந்திருந்த அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இதனால் முதியவரின் வலது கால் உடைந்து தலையிலும் கையிலும் பலமாக காயம் ஏற்பட்டது. அவரது மனைவியும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏவும், போக்குவரத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow