டெல்லி காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

 டெல்லி உள்பட வட மாநிலங்களில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
Delhi air pollution should be discussed in Parliament

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி  எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது , “நான் சந்திக்கும் ஒவ்வொரு தாயும் என்னிடம் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள். எனது குழந்தை நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கிறது, சோர்வடைகிறது, அச்சம் கொள்கிறது, கோபப்படுகிறது என்பதே அது.

மோடி அவர்களே, இந்தியக் குழந்தைகள் நம் கண் முன்பாக மூச்சுத்திணறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? உங்கள் அரசாங்கத்திடம் ஏன் எந்த அவசரமும் இல்லை, திட்டமும் இல்லை, பொறுப்புக்கூறல் இல்லை?

காற்று மாசுபாடு குறித்தும், இந்த அவசர நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய கடுமையான செயல் திட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் உடனடியாகவும் விரிவாகவும் விவாதிக்க வேண்டியது அவசியம்.

நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்று தேவை. சாக்குப்போக்குகளும் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளும் அல்ல.” என தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்

இதனிடையே, காற்று மாசு பிரச்சினை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், “சுத்தமான காற்றும் சுத்தமான குடிநீரும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை.

டெல்லி உட்பட வட இந்தியாவில் காற்று ஆபத்தானதாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக அரசாங்கம், பொதுமக்களிடம் இருந்து வரிகளை வசூலிக்கிறது.

காற்று மாசு பாதிப்பில் இருந்து தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க மக்கள் காற்று சுத்திகரிப்பான்களை வாங்கச் செல்கிறார்கள். ஆனால், அரசாங்கம் அதற்கு 18% ஜிஎஸ்டி வரியைப் போட்டு பணம் பண்ணுகிறது. இது முற்றிலும் அநீதி.

காற்று மற்றும் குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தீர்வுகளை வழங்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் மக்களுக்கு பொருளாதார சுமையையாவது ஏற்றாமல் இருங்கள்.” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow