தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்

பிப்.19ஆம் தேதி சட்டப்பேரவையில் 2024-2025ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Feb 12, 2024 - 06:57
Feb 12, 2024 - 08:07
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (பிப்.12ஆம் தேதி) தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.அந்த வகையில், ஜனவரி மாதம் 2வது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் கூடும். ஆனால் இந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால் சட்டப்பேரவைக் கூட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (பிப்.12ம்தேதி) கூடுகிறது.

பேரவை தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் மாளிகைக்கு சென்று, பேரவை கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்துவதற்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினமே தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டம் - ஒழுங்கு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலைய விவகாரம், முதலீடு ஈர்ப்புதொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம், போதைப் பொருள்நடமாட்டம் போன்ற பிரச்சினைகளை எழுப்ப அதிமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow