ATM facility in train: ஓடும் ரயில் ஏடிஎம்.. ரயில்வே துறை நோக்கி எழும் கேள்விகள்!
சோதனை முயற்சியாக ஓடும் ரயிலில் ஏடிஎம் ஒன்றினை நிறுவியுள்ளது இந்தியன் ரயில்வே. இந்த முன்னெடுப்புக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ஒரு சேர கிளம்பியுள்ளன.

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ரயிலுக்குள் ATM (ஏடிஎம்) இயந்திரத்தை நிறுவி சோதனை செய்துள்ளது ரயில்வே துறை. இதுத்தொடர்பாக துறையின் அமைச்சர் வீடியோ ஒன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”நாட்டிலேயே முதல் முயற்சியாக, இந்திய ரயில்வே ஓடும் ரயிலில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ATM) நிறுவியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மன்மாட்-சிஎஸ்டி பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏப்ரல் 10 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது” என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ATM on Wheels:
ஓடும் ரயிலில் ஏற்படும் அதிர்வுகளை சமாளிக்கும் வகையில் ரப்பர் பேட் மற்றும் போல்ட் அம்சங்களுடன் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு தீயணைப்பு கருவிகளும் ஏடிஎம்-க்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது. ரயிலிலுள்ள மினி பேண்ட்ரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஏடிஎம் இயந்திரத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியமைத்துள்ளனர் ரயில்வே மெக்கானிக்கல் அணியினர். இந்த முயற்சிக்கு “ATM on Wheels" என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25 அன்று அனைத்து விற்பனையாளர்களுடனும் ரயில்வே துறை சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், ரயில்களில் நடமாடும் ஏடிஎம்களை நிறுவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடும் ரயிலில் ஏடிஎம் இயந்திரம், பயணிகளுக்கு பெரிதும் உதவும் என ரயில்வேதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றிப்பெறும் பட்சத்தில், விரைவில் அனைத்து நெடுந்தூர பயண இரயில்களில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவ ரயில்வே துறை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
ரயில்வே துறை இந்த முயற்சிக்கு ஒருப்புறம் ஆதரவு இருந்தாலும், அதிக விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் தென்படுகிறது. ஒரு பயனர் “லோகோ பைலட்களுக்கு பாத்ரூம் கட்டி குடுங்கன்னா முடியாதாம், ஆனா ரயிலுக்குள்ள ஏடிஎம் வைப்பாங்களாம்” என எள்ளி நகையாடியுள்ளார். இன்னும் பலர், ரயில்வே துறையில் சரி செய்ய 1008 பிரச்சினைகள் இருக்கு.அதில் கவனம் செலுத்தலாமே என மத்திய அமைச்சரின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
In a first, ATM facility in train. pic.twitter.com/onTHy8lxkd — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 16, 2025
What's Your Reaction?






