மக்கள் பணிக்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்... தமிழிசை செளந்தரராஜன் உருக்கமான பேச்சு...

மக்கள் பணிக்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன், வருங்கால திட்டம் குறித்து பிறகு கூறுவதாக தமிழிசை செளவுந்தரராஜன் கூறினார்.

Mar 18, 2024 - 21:58
மக்கள் பணிக்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்... தமிழிசை செளந்தரராஜன் உருக்கமான பேச்சு...

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்த தமிழிசை செளந்தரராஜன் மக்கள் பணிக்காக ராஜினாமா செய்ததாக உருக்கமாகக் கூறியுள்ளார்.

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராகவும் இருந்து வந்த தமிழிசை செளந்தரராஜன், கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில்  பாஜக சார்பில் இராதாபுரம் தொகுதியிலும், 2011-ல் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், பாஜக சார்பாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 2009-ல் வடசென்னையிலும், 2019-ல் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜகவில் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்த இவர், 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், 2021 பிப்ரவரி 16 ஆம் தேதி புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து கூடுதல் பொறுப்பு வழங்கினார்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராகவும் இருந்து வந்த தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "தீவிரமான மக்கள் பணி செய்யவே மனமுவந்து ராஜினாமா செய்தேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றியுடையவராக இருப்பேன். நான் ஆளுநராக பணியாற்ற வாய்ப்பளித்த குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் ஆளுநராகத்தான் இரு மாநிலங்களிலும் இருந்தேன். மக்கள் பணி செய்வதற்காகவே ராஜினாமா செய்துள்ளேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு வருங்கால திட்டங்கள் குறித்து கூறுகிறேன்" என்றார்.

மேலும், "பிரதமரிடம் தெரிவித்தபின்தான் ராஜினாமா செய்தேன். என் விருப்பதிற்கு அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆளுநர் பதவியின் போது மக்கள் பணியில் எந்தத் தடையும் ஏற்படவில்லை. நிறைய அனுபவம் கிடைத்தது. நான்கரை ஆண்டுகளில் நான்கு முதலமைச்சர்கள், இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளேன். ஒருமுறை ஆளுநர் ஆட்சியையும் சந்தித்து இருக்கிறேன். அப்போது நான் சிறப்பாக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். மாறுபட்ட கட்சியின் அரசியல்வாதிகள் என்னுடன் சகோதரியாக பழகிய அனுபவம் கிடைத்தது. இப்போது நேரடியாக நேர்மையான அரசியலுக்கு வருவதே என்னுடையே விருப்பம்" என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow