இறால் பண்ணையில் "Drug mafia".. ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..
புதுக்கோட்டை இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 110 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறந்தாங்கி மீமிசலை அடுத்த அரசங்கரை கடற்கரைப் பகுதியில் இறால் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு கிலோக் கணக்கில் கஞ்சா இருப்பதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த சிலர் முயற்சிப்பதாகவும் திருச்சியில் உள்ள நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த இறால் பண்ணைகளில் மீமிசல் காவல்துறையினர் உதவியோடு சேர்ந்து சுங்கத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 110 கோடி ரூபாய் மதிப்புடைய 100 கிலோ எடைகொண்ட ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 874 கிலோ கஞ்சாவையும் கண்டறிந்தனர். அவற்றை அனைத்தையும் பறிமுதல் செய்த மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர், அதனை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுல்தான் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இறால் பண்ணையில் ட்ரக் மாஃபியா எப்போதிலிருந்து நடைபெற்று வருகிறது?, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?