வழக்கு மேல் வழக்கு.. விழி பிதுங்கி நிற்கும் சவுக்கு சங்கர்.. ஜாமின் கிடைக்குமா? போலீஸ் காவலா?
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது சேலம் மாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்த மனு வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசி பிரபலமான சவுக்கு சங்கர், தமிழக அரசு குறித்தும் நீதித்துறை குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். அப்போது, நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர்.
தேனியில் இருந்து கோவைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம், தாராபுரம் அருகே கார் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காவல்துறையினர் சிலரும், சவுக்கு சங்கரும் லேசான காயம் அடைந்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நீதிபதி முன்பு சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரிடம் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களது காரில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்ததால், இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை சிறைக்காவலர்கள் தாக்கியதாக சங்கரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். சிறையில் உள்ள சவுக்கு சங்கரை நேரில் சந்தித்து ஆய்வு வேண்டும் என அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மேல் வழக்கு மேல் வழக்காக போடப்பட்டு வருகிறது.
சேலம் மாநகர காவல்துறையினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பெண் காவலர்கள் மற்றும் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் சேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ஜாமின் கேட்டு சவுக்குசங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை வரும் பத்தாம் தேதி ஒத்திவைத்து கோவை ஜெ.எம் 4 நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை போலீஸ்காவில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்த மனு வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கோவை சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?