அழகர் மலை கள்ளழகரை காவல் காக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி.. தங்கம், வைரத்துக்கும் கணக்கு இருக்கும்
அழகர்கோவிலை பற்றி நிறைய புராண கதைகள் இருக்கிறது. அழகர்மலைக்கு திருமாலிருஞ்சோலை என்கிற இன்னொரு பெயரும் உள்ளது. அழகர் மலையில இருக்கிற பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி பலருக்கும் குலசாமியா இருக்கிறார். நிறைய பேர் பதினெட்டாம்படியான்னு பேர் வச்சிருப்பாங்க. அழகர்மலையில் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி பற்றி தெரிந்து கொள்வோம்.
புராண சிறப்புகள் கொண்ட நகரமான மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு போகும் போதே மனதிற்கு ரம்மியமாக இருக்கும். அழகரை தரிசனம் செய்யப்போகிறோம் என்று நினைக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து விடும். மலைமேலே மரங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்க சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்து அழகர் மலைக்கு போகலாம். கள்ளழகர் கோவிலுக்கு செல்பவர்கள் பதினெட்டாம்படி கருப்பசாமியை கண்டிப்பாக தரிசனம் செய்திருப்பார்கள். சக்தி வாய்ந்த அந்த காவல் தெய்வத்தை கடந்துதான் நாம சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய போக முடியும்.
சித்திரை திருவிழா நடக்கும் இந்த நேரத்தில் கள்ளழகர் அழகர் மலையை விட்டு இறங்கி மதுரைக்கு கிளம்பும் போது தான் போட்டிருக்கிற நகைகளை கருப்பசாமி முன்பாக வைத்து அதை கணக்கு காட்டுவார். அதே போல மதுரையில் வைகை ஆற்றில் இறங்கிட்டு எல்லாருக்கும் தரிசனம் கொடுத்து விட்டு மலைக்கு திரும்ப போகும் போது கருப்பண்ணசாமியிடம் வைத்து கணக்கு காண்பித்து விட்டுதான் கோவிலுக்கு உள்ளே செல்வார். பல ஆண்டு காலமாக இதுதான் நடைமுறையில உள்ளது.
சந்தனம் பூசப்பட்ட கதவு மிகப்பெரிய நிலைமாலை, பிரம்மாண்ட அரிவாள் இதுதான் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. அவர் எப்படி அழகர் மலைக்கு வந்தார் என்பதே புராண கதை.
கேரளாவை ஆண்ட மன்னன் அழகர் கோவிலுக்கு வந்த போது கள்ளழகரோட அழகில் சொக்கிப்போனான். கள்ளழகரை கேரளாவிற்கு கடத்திக்கொண்டு போக நினைத்த அரசன், 18 கேரளா மந்திரவாதிகளை அனுப்பி வைத்தான். இந்த மந்திரவாதிகளுக்கு காவலாக காவல் தெய்வமான கருப்பண்ணசாமியை கூடவே அனுப்பி வைத்தான்.
வெள்ளை குதிரை மீதேறி வந்த கருப்பண்ணசாமியும் 18 மந்திரவாதிகளும் அழகர் மலைக்கு புறப்பட்டு வந்தனர். அழகர் மலைக்கு வந்த உடன் கள்ளழகரை பார்த்த கருப்பு அப்படியே சொக்கி போய் நின்றது. ஆனால் மந்திரவாதிகளோ, அழகரையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு போக நினைத்து கருவறைக்குள் போனார்கள்.
கொள்ளையர் அழகர் மலைக்கு வந்திருக்கும் விசயம் தெரிந்து ஊர்மக்கள் திரண்டு வந்து பதினெட்டு மந்திரவாதிகளையும் கொன்று பதினெட்டு படிகளை களிமண்ணால் செய்து அந்த படிகளில் ஆளுக்கு ஒருவராக புதைத்தனர்.
அப்போது கருப்பசாமியை அழைத்த அழகர், என்னையும் மலையையும் நீ காவல் காத்துக்கொண்டு இங்கேயே இரு என்று அருள்புரிந்தார். அது முதல் அழகர் மலையில் காக்கும் தெய்வமாக இருக்கிறார் பதினெட்டாம்படி கருப்பசாமி. கருப்பசாமிகிட்ட வேண்டிக்கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும் நியாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அழகர் கோவிலுக்கு மட்டுமில்ல பாண்டிய மன்னர்களுக்கும் கருப்பசாமி காவல் தெய்வமாக இருந்துட்டு வரார். இன்றைக்கும் ஆடி மாதத்தில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை சந்தனம் பூசி வழிபட்டு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் அவரை குல தெய்வமாக வழிபடும் மக்கள்.
What's Your Reaction?