நெல்லை ஜெயக்குமார் மரணம்.. சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.. கொந்தளிக்கும் இபிஎஸ், டிடிவி தினகரன்

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

May 4, 2024 - 16:51
நெல்லை ஜெயக்குமார் மரணம்.. சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.. கொந்தளிக்கும் இபிஎஸ், டிடிவி தினகரன்

நெல்லையில் மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெயக்குமார் இன்று எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

திரு. ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு  முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இதே போல அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தனசிங் அவர்கள், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 

ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக,  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்த 30 ஆம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.  

பலமுறை சுட்டிக்காட்டியும், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக,  தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.  

எனவே, இனியாவது பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு,  திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow