நெல்லை காங்கிரஸில் பழைய பகை.. கே.பி.கே ஜெயக்குமார் மரணம்.. அபாண்ட பழி என்கிறார் ரூபி மனோகரன்
கே பி கே ஜெயக்குமாருக்கும் எனக்கும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை என்று எம்எல்ஏ ரூபி மனோகரன் கூறியுள்ளார். எனக்கு வேண்டாதவர்கள் யாராவது என் மீது பழி சுமத்துவதற்காக இந்த மாதிரி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை கரைச்சுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரை கடந்த 2 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, காவல்துறையினர் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரைச்சுத்து புதூரில் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கடந்த மாதம் 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு அவர் எழுதியிருந்த மரண வாக்குமூலம் கடிதமும் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ரூபி மனோகரன் உட்பட சில காங்கிரஸ் தலைவர்களை குற்றஞ்சாட்டி வாசகங்கள் உள்ளன இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைந்துள்ளார். இதனிடையே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட காங்கிரஸில் ரூபி மனோகரனுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை நீடித்து வருகிறது.
ஜெயக்குமார் தலைவராக பொறுப்பு வகிக்கும் கிழக்கு மாவட்டத்தில் மாவட்டத்தில் தொடங்கி கீழ்மட்டம் வரை அனைத்து நிர்வாகிகள் இடையேயும் உள்கட்சி பூசல் நிலவுகிறது. இதில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஒரு பிரிவாகவும்; மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தரப்பினர் ஒரு பிரிவினராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரூபி மனோகரனுக்கு எதிராக காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். காங்கிரஸ் கட்சியின் சென்னை சத்தியமூர்த்தி பவுனில் தேவையில்லாமல் இங்கே இருந்து கூலிக்கு அழைத்து வந்த ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் அங்கு பிரச்சனை ஏற்படுத்தினர்.
இதுபோன்ற சூழ்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சுட்டிக்காட்டிய நபர்களில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயக்குமார் சடலத்தை மீட்ட போலீசார் அவரது மரணத்திற்கு யார் காரணம் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால் யாரேனும் அவரை தீ வைத்து எரித்தார்களா? அல்லது அவரே கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கி வருகின்றனர்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், கே பி கே ஜெயக்குமார் எனக்காக ரொம்ப பாடுபட்டவர் அந்த கடிதத்தில் இருப்பது பொய்யான தகவல். ஜெயக்குமாரின் மரணம் எப்படி நடந்தது என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரிப்பார்கள்
என்றார்.
கே பி கே ஜெயக்குமாருக்கும் எனக்கும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை. மக்களவைத் தேர்தலில் கூட ஒன்றாக பயணித்தோம். இதன் பின்னால் யாரோ செயல்படுகிறார்கள் என்று தெரிகிறதே தவிர யார் என்று தெரியவில்லை. எனக்கு வேண்டாதவர்கள் யாராவது என் மீது பழி சுமத்துவதற்காக இந்த மாதிரி செயலில் ஈடுபட்டிருக்கலாம். என் மீது அபாண்டமாக சுமத்துவதற்காக இந்த மாதிரி செயலில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றும் ரூபி மனோகரன் கூறியுள்ளார்.
What's Your Reaction?