அதிமுக ஆலமரம்.. ஆயிரம் காலத்து பயிர்.. தண்ணீர் பந்தல் மேட்டரில் பஞ்ச் வைத்த எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஆலமரம். ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடப்போகும் நல்லியக்கம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Apr 24, 2024 - 16:23
அதிமுக ஆலமரம்.. ஆயிரம் காலத்து பயிர்.. தண்ணீர் பந்தல் மேட்டரில் பஞ்ச் வைத்த  எடப்பாடி பழனிச்சாமி

கோடை காலம் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல்களை திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் பொதுவாக தண்ணீர் பந்தல் நீர் மோர் பந்தல்களை திறப்பார்கள். தேர்தல் நேரமாக இருந்த காரணத்தால் இதுநாள் வரை அரசியல் கட்சியினர் அடக்கி வாசித்தனர். காரணம் தேர்தல் விதிமுறைகள்தான். தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் அரசியல் கட்சியினர் தற்போது தண்ணீர் பந்தல் திறக்க ஆரம்பித்து விட்டனர். 

தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெருமளவு அதிகரித்துள்ளது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதையே தவிர்த்து விட்ட நிலையில், பல இடங்களிலும் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, அதிமுகவின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திடும் அறப் பணிகளில் ஈடுபடுமாறு கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை பிறப்பித்துள்ளார்.

கட்சிகள் மட்டுமின்றி பல இடங்களிலும் கோடை காலங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படுவது இயல்பான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகின்றது.      

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திடும் அறப் பணிகளில் ஈடுபடுங்கள். 

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தவர் தான், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஆலமரம். ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடப்போகும் நல்லியக்கம்” என இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்து, அதன்படி கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும், அனைவரும் பாராட்டும் வகையில் ஆற்றினார்கள்.

 நம் இருபெரும் தலைவர்களின் வழியில், உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வருகிறது. அதே போல், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொய்வில்லாமல் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன். 

அந்த வகையில், மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.

தற்போது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்த கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, 25.4.2024 - வியாழக் கிழமை காலை முதல் மக்களின் தாகத்தைத் தணிக்கும் அறப் பணிகளில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல்களை கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கப் பின்னர் அதிமுக காணமல் போகும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அண்ணாமலை கூறிய நிலையில் அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பஞ்ச் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow