அதிமுக கொடி, சின்னம் வழக்கு : தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்...
வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் - இபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கட்சிக் கொடி, பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதற்குத் தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னம், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று (மார்ச் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சியில் இருந்து சிலரை நீக்கினேன். அதற்கு தனக்கு உரிமை உள்ளது. கட்சியின் சின்னம், கொடியைப் பயன்படுத்த தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் தன்னை தெரிவித்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைத் தான் எதிர்க்கிறோம். வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?