கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுக்கும் பாஜக... காங்கிரஸ் தலைவருக்கு ஜே.பி.நட்டா பரபரப்பு கடிதம்!

'வாழ்வாதாரத்தில் பின்தங்கிய பட்டியலின மக்கள் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்துள்ள நிலையில், ராகுல் காந்தியும், நீங்களும் (மல்லிகார்ஜுன கார்கே) இந்த விவகாரம் குறித்து பேசவில்லை. இதுதான் காங்கிரஸ் பேசும் சமூகநீதியா? மக்களின் உரிமையா? என தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்'

Jun 24, 2024 - 15:47
கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுக்கும் பாஜக... காங்கிரஸ் தலைவருக்கு ஜே.பி.நட்டா பரபரப்பு கடிதம்!
ஜே.பி.நட்டா

டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கருத்து கூறாமல் மெளனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 57 இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்களின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அகில இந்திய அளவில் பாஜக கையில் எடுத்துள்ளது. நேற்று டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து ஏராளமான தலித்துகள் உயிரிழந்துள்ளனர். 

திமுக அரசு கள்ளச்சாராயத்தை தடுப்பதில் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்  கள்ளக்குறிச்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பேசும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கள்ளச்சாராய விவகாரம் குறித்து மவுனமாக இருப்பது ஏன்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இன்று பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜிவ் சந்திரசேகர், ''தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களின் உரிமைகள் குறித்து பேசும் இந்தியா கூட்டணி கட்சிகள்  கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட வாய்திறக்கவில்லை. 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக ஆள்வதால், ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காக்கிறார். ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்து, திமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்பி மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி விலக செய்ய சொல்ல வேண்டும்'' என்றார்.

இதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேசிய மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன், ''கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 தலித்துகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேவோ, இந்தியா கூட்டணி கட்சிகளோ இது குறித்து இதுவரை பேசவில்லை. 

முதல்வர் ஸ்டாலின் இதுவரை சம்பவ இடத்துக்கு செல்லவில்லை. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்'' என்றார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு இருந்து வரும் தாய்மார்களின் கண்ணீர், இறுதிச்சடங்கு தொடர்பான புகைப்படங்கள் அதிர வைக்கின்றன.

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய பட்டியலின மக்கள் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்துள்ள நிலையில், ராகுல் காந்தியும், நீங்களும் (மல்லிகார்ஜுன கார்கே) இந்த விவகாரம் குறித்து பேசவில்லை. இதுதான் காங்கிரஸ் பேசும் சமூகநீதியா? மக்களின் உரிமையா? என தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் வெட்டவெளிச்சமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இதில் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை. ஆகவே நீங்கள் கள்ளக்குறிச்சி விவாகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்த வேண்டும்.

மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுகவிடம்  வலியுறுத்த வேண்டும். கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறும்படி ராகுல் காந்தியிடமும், பிரியங்கா காந்தியிடமும் தெரிவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக பாஜக தலைவர்கள் கருப்பு ரிப்பன் கட்டி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் நீங்களும், காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்க வேண்டும்'' என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow