கடற்கரை கிராமங்களில் கடல் ஆம்புலன்ஸ்...அடுத்த பட்ஜெட்டில் நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ராமேஸ்வரம் வரும் மத்திய பொறுப்பில் இருப்பவர்கள் கச்சத்தீவை மீட்போம் என்று பேசி ஏமாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி சிறைபிடிக்கப்படுகிறார்கள். ராமேஸ்வரம் வரும் மத்திய பொறுப்பில் இருப்பவர்கள், இதைப்பற்றிக் கவலைப்படாமல், கச்சத்தீவை மீட்போம் என்று பேசி ஏமாற்றி வருகிறார்கள். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒரு மீனவர் கூட பாதிக்கப்படாமல் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பார். காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிபேட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் செய்யமுடியும். ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் முயற்சி செய்யவில்லை. தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் வகையில் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும்" என கூறினார். மேலும், "மாநிலங்கள் கொடுக்கும் வருவாயைத் தான் மத்திய அரசு திருப்பித் தருகிறது. அவர்கள் முதலாளியோ, நாங்கள் தொழிலாளியோ இல்லை. எல்லாவற்றையும் செய்வதாக கூறும் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் கட்டவில்லை" என்றும் கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?