மத்திய இணை அமைச்சரின் சர்ச்சை பேச்சு... நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...மதுரை கிரைம் போலீசார் வழக்குப் பதிவு...

Mar 20, 2024 - 20:08
மத்திய இணை அமைச்சரின் சர்ச்சை பேச்சு... நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...மதுரை கிரைம் போலீசார் வழக்குப் பதிவு...

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே-இல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்பு படுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அவர் மீது மதுரை கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை  விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். 

மத்திய இணையமைச்சரின் இந்த கருத்துக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புபடுத்திப் பேசியதற்கு மன்னிப்பு கோரியதோடு, தனது கருத்துகளை திரும்பப் பெறுவதாகவும் ஷோபா கரந்த்லாஜே அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இதனிடையே மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்து குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது. இந்நிலையில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்து குறித்து மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன்பேரில் ஷோபா கரந்தலாஜே மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow