அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். 2014ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து செந்தில்பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2015ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 16 முறைக்கு மேல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமின் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
What's Your Reaction?