முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?-மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாகவும், முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் மூலமாகவும், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாகவும், முதலமைச்சரின் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு என்ற தமிழக அரசின் இலக்குக்கான வரைவு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய 20 நாளில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவா? அல்லது முதலீடு செய்வதற்காகவா? என மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
மேலும், முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தின் போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளபோது ஏன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும்.எனவே, திமுக அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?