நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது... அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புவதாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். 

May 11, 2024 - 21:44
நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது... அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 50 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், திகாா் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலையொட்டி ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதலமைச்சர் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக ஆம் ஆத்மியின் கிழக்கு டெல்லி மக்களவை வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கிருஷ்ணா நகரில் ரோட் ஷோ நடத்தினர். 
  
அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.கடவுள் எனக்கு 21 நாட்கள் கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்து நாடு முழுவதும் பயணம் செய்வேன். பாஜகவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்று கூறினார். 

மேலும் "அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, 400 இடங்கள் தேவை என்று பாஜக கூறுகின்றனர். சர்வாதிகாரத்தை கொண்டு வரவே பாஜகவினர் விரும்புகிறார்கள்" என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். 

இதனை தொடர்ந்து மெஹ்ராலியில் ஆம் ஆத்மியின் தெற்கு டெல்லி மக்களவை வேட்பாளர் சாஹிராம் பஹல்வானை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் ரோட்ஷோ நடத்தினர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "பாஜக தலைமையிலான மத்திய அரசு என்னைக் கைது செய்தது. நான் ஒரு சிறிய மனிதன், எங்களிடம் ஒரு சிறிய கட்சி உள்ளது, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அரசாங்கங்கள் உள்ளன. இருப்பினும், டெல்லி மக்களுக்காக தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகளை கட்டினேன் இது தவறா? என்று கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow