மக்காச்சோளத்தின் மீதான 1% செஸ் வரி: 500 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்!
மக்காச்சோளத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு 1 % செஸ் வரியை விதித்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செஸ் வரியை ரத்து செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு அரசு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரும் வேளாண் விற்பனை குழுக்கள் (Agricultural Marketing Committee) மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 1 % செஸ் வரியை வசூலித்து வருகிறது.
மக்காச்சோளத்திற்கு ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 % செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது கூடுதலாக நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும், மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரியை விதித்துள்ளது.ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக செஸ் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த செஸ் வரி என்பது விற்பனை குழுக்கள் அமைந்துள்ள வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் வசூல் செய்யலாம் என்பதே சரியானதாகும். ஆனால் அந்த விற்பனை குழுக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நேரடியாக விவசாய நிலங்களில் வியாபாரிகளுக்கு விற்கும் பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பது என்பது ஏற்புடையதல்ல.
அது விவசாயிகளுக்கு எதிரானதாகும், சராசரியாக ஒன்றியத்திற்கு ஒரு வேளாண் விற்பனை குழு வளாகம் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது, 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அதன் விற்பனை பரப்பளவு உள்ளது, ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியிடம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும் வியாபாரி 10 கிலோமீட்டருக்கு மேல் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று, வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில் நிறுத்தி வேபிரிட்ஜ் மூலமாக எடை போட்டு, வரியை செலுத்தி விட்டு எடுத்துச் செல்ல வேண்டும். வியாபாரிகள் தற்போது செஸ் வரி செலுத்தும் தொகை, கமிட்டி வரை எடுத்துச் செல்லும் வாடகை ஆகியவற்றை விவசாயிகளிடம் கழித்து பணத்தை கொடுப்பதால் விவசாயிகள் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் காத்திருக்கும் சூழ்நிலை:
மேலும் வேளாண் விற்பனை குழுக்கள் மாலை 5 மணிக்கு மேல் செயல்படுவதில்லை, சனிக்கிழமை மதியத்திற்கு மேல் செயல்படுவதில்லை, ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை, ஆனால் வியாபாரிகள் பொருளை கொள்முதல் செய்த பின்பு காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. வேளாண் விற்பனை குழு வளாகத்திற்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு துறை சார்ந்த வியாபாரிகளை வர வைக்கிறார்கள், ஏலம் நடைபெறுகிறது, பொருளை இருப்பு வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு பராமரிப்பு செலவு உள்ளது, எனவே வேளாண் விற்பனை குழு வளாகத்திற்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு 1 % செஸ் வரி விதிப்பது என்பது ஏற்புடையது.
ஆனால் விற்பனைக்குழு வளாகத்திற்கு வெளியே விவசாயிகள், நேரடியாக விவசாய நிலத்திலிருந்து வியாபாரிகளுக்கு விற்கக்கூடியதற்கு வரி விதித்திருப்பது, வரி கட்டாமல் செல்லக்கூடிய வாகனங்களை பறக்கும் படை அமைத்து ஆங்காங்கே பிடித்து நிறுத்தி பல மடங்கு அபராதம் விதிப்பது போன்ற செயல்களால் தற்போது வியாபாரிகள் கிராமத்திற்கு வருகை தராததால் 22 மாவட்டங்களில் மக்காச்சோள விற்பனை மிக கடுமையாக தேக்கமடைந்துள்ளது.
விவசாயிகள் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, உள்நாட்டு மக்காச்சோளத்திற்கு 1 % வரி விதிக்கும் தமிழ்நாடு அரசு, இதன் மூலமாக உள்நாட்டு மக்காச்சோளத்தின் விலையை விவசாயிகள் விற்க முடியாத அளவுக்கு அதிகப்படுத்தி விட்டு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், மரபணு மாற்றப்பட்ட வெளிநாட்டு மக்காச்சோளத்திற்கு தமிழ்நாட்டில் சந்தையை உருவாக்கும் பணியை மறைமுகமாக செய்வதாக விவசாயிகள் சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு குவிண்டாலுக்கு விவசாயிகளுக்கு 500 ரூபாய் நஷ்டம்:
ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 விற்றால் மட்டுமே கட்டுபடியாகும் என்கிற சூழ்நிலையில், தற்போது ரூ. 2,800 ரூபாய்க்கு விற்று வந்த மக்காச்சோளம், இந்த பிரச்சனையால் ரூ. 2,300 க்கு விற்று வருகிறது, ஒரு குவிண்டாலுக்கு விவசாயிகளுக்கு 500 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசே பொறுப்பாகும்.
எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, வேளாண்மை துறைக்கு உட்பட்டு செயல்படும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை விதித்திருக்கக்கூடிய 1 % செஸ் வரியை வேளாண் விற்பனை குழு வளாகங்களில் மட்டும் வசூலிக்க வேண்டும் என திருத்தம் செய்தும், வேளாண் விற்பனை வணிகத்துறையில் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனைக்கு முழுமையாக விலக்களித்து உத்தரவிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more:
மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: பங்கேற்ற 56 கட்சிகள்- முதல்வர் மொழிந்த தீர்மானங்கள் என்ன?
What's Your Reaction?






