ஓட்டை உடைசல் பேருந்துகள்.. அச்சத்தில் பயணிகள்... உடனே ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து  பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Apr 27, 2024 - 12:39
ஓட்டை உடைசல் பேருந்துகள்.. அச்சத்தில் பயணிகள்... உடனே ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

மழை காலங்களில் வெள்ள நீர் பேருந்துக்குள் வரும் அளவிற்கு மோசமான பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. மகளிர் இலவசமாக பயணம் பேருந்துகளின் நிலை படு மோசமாக உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் அரசு பேருந்துகளின் மோசமான நிலையால் இருவேறு விபத்துகள் நேர்ந்துள்ளன. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 15ஆம் தேதி பேருந்தின் பின் பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது. அதனை ஓட்டுநரும், நடத்துனரும் எடுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் பேசு பொருளானது. 

இதேபோல் 3 நாட்களுக்கு முன் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்ற அரசு பேருந்து வளைவு ஒன்றில் திரும்பும்போது நடத்துனர் அமர்ந்திருந்த இருக்கை கழன்ற சாலையில் விழுந்துள்ளது. இதில் இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டார். நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. 

இதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகளை கடந்த பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும் பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். 

அரசு பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று (ஏப்ரல் 26) போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow