3-வது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகளால் பதற்றம்.. இன்று 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை..
மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று (பிப்.15) மாலை 5 மணிக்கு மீண்டும் விவசயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி படையெடுத்துள்ள விவசாயிகளின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போராட்டத்தின் முதல் நாளில் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முட்கம்பிகள் கொண்ட தடுப்புகளால் மூடி, விவசாயிகளை டெல்லியினுள் நுழைவதை தடுத்தனர். தடுப்புகளை மீறி நுழைய முற்பட்ட விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் விரட்டியடித்தனர். அதற்கும் ஒருபடி மேலாக ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை செலுத்தி விவசாயிகளை முடக்க நினைத்தனர்.
ஆனாலும் விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு தடுப்புகளை தகர்த்தும் முன்னோக்கி செல்ல முற்பட்டு வருகின்றனர். மேலும் ட்ரோன் மூலம் செலுத்தப்படும் கண்ணீர் புகை குண்டுகளை பட்டம் விட்டு அவற்றை தடுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் போராட்ட களம் போர் களம் போல் காட்சியளிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று (பிப்.15) மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
What's Your Reaction?