திருத்தணி, திருப்போரூர் முருகன் கோவில்களில் மாசி பெருவிழா கொடியேற்றம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாசி பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் மற்றும் திருப்போரூர் ஸ்ரீகந்தசாமி திருக்கோயில் ஆகியவற்றில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் உற்சாகமாகத் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா பிரம்மோற்சவ நிகழ்ச்சி இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வு 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த நாட்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் உற்சவர் முருகப்பெருமான் புலி வாகனம், யானை வாகனம், திருத்தேர் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
இதனைத்தொடர்ந்து மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணம் பிப்ரவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் அதிகாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகந்தசாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் தங்கக்கொடி மரத்தில் பக்தர்களின் ‘அரோகரா’.. ‘ அரோகரா’.. என்ற கோஷம் விண்ணை முட்டக் கொடியேற்றம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வானை முருகப் பெருமானை வழிபட்டனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21ம் புதன்கிழமையும், வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும் நடைபெறவுள்ளது.
What's Your Reaction?