புழல் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி

2 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

Dec 14, 2023 - 14:40
Dec 15, 2023 - 17:23
புழல் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி

புழல் மத்தியச்சிறையிலிருந்து பெண் கைதி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த 2 பெண் சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரைச்சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளார்.அப்போது அந்த பகுதியில் (2021 ஆம் ஆண்டு) ஒரு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துள்ளார் ஜெயந்தி. இந்த வழக்கில் துரைப்பாக்கம் போலீசார் ஜெயந்தியை கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறைக்குள் கைதிகளுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தூய்மைப்பணி, சுகாதாரப் பணி, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவை ஜெயந்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜெயந்திக்கு நேற்று தூய்மைப்பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைதிகளை உறவினர்கள் வந்து சந்திக்கும் நேர்காணல் அறை பகுதியில் ஜெயந்திக்குத் தூய்மைப்பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.நேற்று மாலை சிறையில் வழக்கம் போல கைதிகளைக் கணக்கெடுக்கும் பணியின்போது பெண் கைதி ஜெயந்தி காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் காவல்துறையினர் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஜெயந்தியைத் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சிறைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.துப்பாக்கி ஏந்திய போலீஸ் எனப் பல அடுக்கு உயர் பாதுகாப்பு கொண்ட புழல் சிறையிலிருந்து பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் கைதி தப்பியோடிய நேரத்தில் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலை சிறைக்காவலர் கனகலட்சுமி மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர் கோகிலா ஆகியோரை சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow