அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.. தேதி விவரங்கள் வெளியீடு
வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்குகிறார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய வீடு முறைகேடு வழக்கில் தீர்ப்பளிக்கும் தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 ஆம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான குற்றச்சாட்டில் அதிமுக ஆட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் ஐ.பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஐ.பெரியசாமி எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவித்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை கடந்த 13-ம் தேதி நிறைவடைந்த நிலையில், வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்குகிறார்.
What's Your Reaction?