இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம்... 61 நாட்களை 45 நாட்களாகக் குறைக்க மீனவர்கள் கோரிக்கை...
மீன்பிடி தடைக்காலம் இன்று (15.4.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிலையில், 61 நாட்களிலிருந்து 45 நாட்களாக தடைக்காலத்தைக் குறைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்க காலம் என மாநில அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவித்து, மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க அரசு தடைவிதித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தில் இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், போதுமான அளவு மீன் கிடைக்காததோடு, வருவாயும் இல்லாததால் இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை ஒரு மாதமும், மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதமும் என 2 முறையாக தடைக்காலத்தை மாற்றி அமல்படுத்த வேண்டும் என்பது மீனவர்கள் கோரிக்கை. ஆனால் இந்த ஆண்டும் வழக்கம் போல வருகிற 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன் பிடிதடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறுகின்றனர்.
What's Your Reaction?