உணவே அருமருந்து!சர்வநோய் நிவாரணி பிரண்டை

பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப் பிரண்டை, தட்டைப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை இப்படிப் பலவகைகளில் கிடைக்கின்றன. நான்கு பட்டைகளைக் கொண்ட சாதாரண பிரண்டையே இங்கு அதிகம் பயன்படுத்துகிறோம். 

உணவே அருமருந்து!சர்வநோய் நிவாரணி பிரண்டை
சர்வநோய் நிவாரணி பிரண்டை

ஜெமினி தனம்

பிரண்டையை வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். ‘உடைந்த எலும்பை ஒட்டவைக்குமாம் பிரண்டை’ என்று முன்னோர்கள் சொல்வதுண்டு. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கால்சியம் மாத்திரைகள் அதிகம் தேவைப்படாது. 

பிரண்டைத் தண்டுகளை வெறுமனே கைகளால் தொட்டு சுத்தம் செய்தால் அவை சருமத்தில் பட்டு எரிச்சலையும் அரிப்பையும் உண்டு செய்யும். கைகளில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அல்லது தேங்காயெண்ணெயை கை முழுவதும் தடவிக்கொண்டு நாரை உரித்தால் அரிப்பும் எரிச்சலும் இருக்காது.

பிரண்டையைப் பறிக்கும் போது சுற்றியிருக்கும் இலையயும் தனியாக சமைக்கலாம். இதன் இலைகளும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. இந்த இலையை வதக்கி துவையலாக்கிச் சாப்பிடலாம். செரிமானம், அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு அருமருந்து பிரண்டை இலை துவையல்.

எலும்பு முறிவு, எலும்பு பலவீனம்,  எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் எலும்புகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்தும் சிகிச்சையுடன் பிரண்டையை உணவாகச் சேர்த்து வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். 

குழந்தைகளுக்குப் பிரண்டையைக் கொடுத்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நினைவாற்றல் அதிகரிக்கும், எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் இருக்காது.  மூளை சிறப்பாகச் செயல்படும். பசியின்மை உள்ள குழந்தைகளுக்குப் பிரண்டை கொடுத்துவந்தால் பசியை  தூண்ட உதவும்.

பிரண்டை வேர் எடுத்து உலர்த்தி பொடியாக்கி சேகரிக்கவும். இதைக் கால் டீஸ்பூன் அளவு  தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  மூட்டுவலி இருப்பவர்கள் இதைத் தண்ணீரில் கலந்து குழைத்து பற்றுப்போல் போடலாம்.  வலி உபாதை தற்காலிகமாகக் குறையும்.

பிரண்டை சட்னி, பிரண்டை துவையல், பிரண்டை பொடி,  பிரண்டை உப்பு, பிரண்டை குழம்பு,  பிரண்டை சாதம், பிரண்டை தோசை என்று வித விதமாகச் செய்யலாம். பிரண்டையை எப்படிச் சமைத்தாலும் மற்ற பொருள்களை விடப் பிரண்டையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். 

அதிகமாகப் பிரண்டை  கிடைக்கும்போது பிரண்டையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பானையில் உப்பு சேர்த்த மோரில் ஊறவைக்கவும். இரண்டு நாள் கழித்து  பிரண்டையை எடுத்து வெயிலில் ஊறவைத்து மீண்டும் பானையில் சேர்த்து மீண்டும் வெயிலில் வைத்து  நன்றாக வற்றலாக்கி வைத்துகொண்டால் வற்றலாகச் சாப்பிடலாம். காரக்குழம்பில் காய் இல்லாதபோது இதைச் சேர்த்து வைக்கலாம். 

காடுகளிலும் பரந்த  இடங்களிலும் வேலிகளிலும் பற்றி வளரும் பிரண்டையின் ஒரு கணுப்பகுதியை வெட்டி எடுத்து வைத்தாலே கொடிபோல் பற்றிக்கொண்டு செழித்து வளரும். அடுக்குமாடி வீடுகளிலும் அழகாய் படர்ந்து வரும். முதலில் பிரண்டையை நட்டு வையுங்கள். தொட்டிகளிலும்  கஷ்டப்படாமல் வளரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow