பொட்டுவை அகற்றிய விஜய்... வைரலாகும் அறிக்கைகள்... இதுதான் தவெக அரசியல் கொள்கையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றுள்ள விஜய்யின் புகைப்படத்தில் பொட்டு இல்லாததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே, அவரது ஒவ்வொரு அசைவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. கட்சி பெயர், கட்சி கொடி, பாடல் என அனைத்திலும் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுவதோடு, கொள்கை என்னவென்று சொல்லாமலே இதெல்லாம் செய்வது அரசியல்வாதிக்கான தகுதியா என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.
மாணவர்களை அழைத்து பாராட்டுவிழா நடத்தியபோது, விஜய் தனது நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். அதேபோல், கட்சி கொடியின் நிறம், ஜோதிடப்படி சில விஷயங்களை விஜய் செய்தது என அனைத்தையும் குறிப்பிட்டு, அவர் ஒரு வலதுசாரி என இடதுசாரி அமைப்புகள் விமர்சனம் செய்தன. ஆனால், மத பண்டிகைகளை தவிர்த்து மற்ற அனைத்து சிறப்பு நாட்களுக்கும் விஜய் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி போன்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. மாறாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.
பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியதும், அவர் திமுகவின் பி டீம்... அதனால் தான் இந்துக்களை புறக்கணித்து, பெரியார் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. உடனே விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இடதுசாரி அமைப்புகள், தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி யாராலும் எந்த அரசியலையும் செய்யமுடியாது என்றுக்கூறி விஜய் செயலை வரவேற்றனர். இதனால் வலதுசாரிகள் விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வலதுசாரிகளின் கோபத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்சி தொடங்கிய நாளில் இருந்து விஜய் வெளியிட்ட தவெக அறிக்கையில், நெற்றியில் பொட்டு வைத்த விஜய்யின் படம் இடம்பெற்றிருக்கும். தற்போது, பொட்டு வைத்த விஜய்யின் படம் மாற்றப்பட்டு, வெறும் நெற்றியோடு இருப்பது போன்ற விஜய்யின் மற்றொரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், முழுசா இடதுசாரியாக மாறிய விஜய்யை பாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு, இடதுசாரிய கொள்கைத்தான் விஜய்யின் உண்மையான கொள்கை என்றும், அவர் திமுக பி டீம் என்பதை உறுதி செய்துவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?