மகள் கவிதா கைது.. கொந்தளித்த கே.சி.ஆர்.. அமலாக்கத்துறை கூறியது என்ன?!
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதாவை அமலாகத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்ததால் பி.ஆர்.எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் ரூ.100 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகவும், இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையார்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாகவும் பாஜக புகார் கூறியது.
இதையடுத்து புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணையை தொடங்கி நிலையில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகிய ஆம்ஆத்மி தலைவர்களும் நாடு முழுவதும் எதிர்கட்சித் தலைவர்கள் சிலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்தவழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளான கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கு வரும் 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். மதியம் 1.45 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி நீடித்தது. அப்போது கவிதாவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் வீட்டிற்கு நுழைந்து சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கவிதாவின் இல்லத்தின் முன்பு குவிந்த பி.ஆர்.எஸ். தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனையின் நிறைவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவை கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் முக்கியப் பங்காற்றிய 'சவுத் குரூப்' என்ற லாபியின் ஒரு பகுதியாக கவிதா இருந்ததாக அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கவிதாவின் உறவினர்கள் தங்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தொடர்ச்சியாக பிரச்னை செய்ததாகவும், இதனால் சூழலை சமாளிக்க முடியாமல் தவித்ததாகவும் அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் மகளை கைது செய்த அமலாக்கத்துறையினரை நோக்கி, நீங்கள் கடும் சிக்கலில் இருக்கிறீர்கள் என கே.சி.ஆர் பேசிய வீடியோவும் வெளியானது. கவிதாவின் கைது சட்டவிரோதம் எனக்கூறிய அவர், நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?