தடையை மீறி இன்று விவசாயிகள் போராட்டம் - உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகர்
மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து தடையை மீறி 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தவுள்ளன.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் புகழ்பெற்ற கோஷமான "டெல்லி சலோ" என்ற பெயரில் விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.
கிசான் மஜ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் அழைப்பின்பேரில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்ல விவசாயிகள் ஆயத்தமாகி வந்தன. இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டபோது, பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மத்திய அரசின் கடைசி முயற்சியாக மத்திய உணவுத்தறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் விவசாயத்தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மின்சார சட்டம் 2020 ரத்து, லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு, விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது ஆகிய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண் பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு ஒப்புக்கொள்ளாததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து மத்தியஅரசு உடனான 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், தங்களின் நேரத்தை வீணடிக்க மட்டுமே அரசு விரும்புவதாகவும் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் பேரணி டெல்லியில் நுழைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். டெல்லி, பஞ்சாப் எல்லைகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கான்கிரீட் தடை, இரும்பு ஆணிகள், முட்கம்பிகளுடன் சாலைத்தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெல்லிக்கு வரும் 3 மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்புகள் கொண்டு எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு டெல்லியில் பேரணி, கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 23 வயதில் சிவில் நீதிபதி.. குழந்தை பெற்று 2வது நாளில் தேர்வெழுதச் சென்ற பெண்
What's Your Reaction?