GV Prakash: ”தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா… உணர்வுக்கு மதிப்பளியுங்கள்..” ஜிவி பிரகாஷ் ஆதங்கம்!
ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் எழுந்தன. இதனையடுத்து ஜிவி பிரகாஷ் தற்போது டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை: ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினரின் விவாகரத்து தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து பெறுவது வழக்கமாகி வருகிறது. ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடியும் பள்ளி காலம் முதலே காதலித்து வந்தனர். ஜிவி பிரகாஷ் இசையில் பல மெலடி பாடல்கள் பாடி ரசிகர்களை உருக வைத்துள்ளார் சைந்தவி. ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு கோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய சப்போர்ட் இருந்தது, இருவரையும் ரோல் மாடலாகவும் ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பரஸ்பர புரிதலோடு பிரிவதாக அறிவித்தனர். 2013ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு 4 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவருமே தாங்கள் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின்னர், மன அமைதிக்காகவே இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். இதனையடுத்து ரசிகர்களும் நெட்டிசன்களும் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக பல ஊடகங்களில் ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு இது தான் காரணம், அதுதான் காரணம் என பல யூகங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் காட்டமான ஜிவி பிரகாஷ், தனது ஆதங்கத்தை டிவிட்டரில் கொட்டித் தீர்த்துள்ளார். அதோடு சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதன்படி, ”புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.”
“தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ‘யாரோ ஒரு தனிநபரின்’ வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இந்த முடிவை மேற்கொண்டோம்.”
“எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனிமனித நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?