நியூஸ் க்ளிக் நிறுவனர் கைது சட்டவிரோதம்.. உடனே ரிலீஸ் பண்ணுங்க - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

நியூஸ் க்ளிக் நிறுவனரான பிரபீர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

May 15, 2024 - 13:14
நியூஸ் க்ளிக் நிறுவனர் கைது சட்டவிரோதம்.. உடனே ரிலீஸ் பண்ணுங்க - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்று இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துடன் நியூஸ் க்ளிக் நிறுவனம் செயல்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் முன்னதாக அறிவித்தார். தொடர்ந்து அந்நிறுவனம் சீனவிற்கு ஆதரவாக பிரசாரத்தைத் தூண்டும் நெட்வொர்க்கில் இருந்து பணம் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டியது. 

இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நியூஸ் க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டார். 

8,000 பக்கங்களுடன் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சீனா ஆதரவு பிரசாரத்தை ஊக்குவித்து நிதியுதவி செய்ததாக பிரபீர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து நிறுவனத்தின் HRஆன அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபீர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கவாய், நீதிபதி சந்தீப் மேதா அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபீர் கைது வழக்கில் ரிமாண்ட் நகல் வழங்கப்படாததால் அவரது கைது செல்லாது என நீதிபதிகள் அறிவித்தனர். 

அதாவது கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில், ரிமாண்ட் விண்ணப்பத்தின் நகல் வழங்கப்படவில்லை எனவும் கைதுக்கான காரணம் முறையாக கூறப்படவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து பங்கஜ் பன்சால் வழக்கை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காவலில் இருந்து விடுவிப்பதற்கான வழிகாட்டுதல் கோர மேல்முறையீட்டாளர்களுக்கு உரிமையுண்டு எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இதையடுத்து ரிமாண்ட் உத்தரவு செல்லாது எனக்கூறி பிரபீர் புர்கயஸ்தா கைது நடவடிக்கையை சட்டவிரோதம் எனக்கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow