ஆற்றில் மிதந்து வரும் முதலை.. அச்சத்தில் சீர்காழி மக்கள்.. எச்சரிக்கும் வனத்துறை
 
                                சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து காட்டுப்பகுதியில் வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலகுடி பகுதியில், கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த உள்ளூர்வாசிகள் முதலை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள், காளிகாவல்புரம் கூப்பிடுவான் உப்பனாற்றின் தெற்குப் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாகவும், இதனால ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
இந்நிலையில், ஆற்றில் முதலை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பலகையை பொதுமக்களின் பார்வையில் படாமல் வனத்துறையினர் காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையை அனைவரின் பார்வையில் படும்படி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், முதலையை கண்டுபிடித்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            