Gautham Menon: சூர்யா படத்தால் வந்த சர்ச்சை… கெளதம் மேனன் இது நியாயமா..? கேள்வி எழுப்பிய பிரபலம்!

கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனனுக்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mar 21, 2024 - 13:15
Gautham Menon: சூர்யா படத்தால் வந்த சர்ச்சை… கெளதம் மேனன் இது நியாயமா..? கேள்வி எழுப்பிய பிரபலம்!

மாதவன் நடித்த மின்னலே மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன், தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில், கெளதம் மேனனும் சூர்யாவும் முதன்முறையாக கூட்டணி வைத்த காக்க காக்க மெஹா ஹிட் அடித்தது. முக்கியமாக சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் கெளதம் மேனன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதுபற்றி எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அதில், “மதிப்பிற்குரிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு..வணக்கம். தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான். சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில் நீங்கள் ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை என்கிற சித்ரா லட்சுமணன் அவர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்.. நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால்... நானே எழுதத் துவங்கினேன் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்.”  

”அந்தக் காதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை. காக்க காக்க திரைப்படத்தின் போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக் கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன். அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.” 

“ஒரு படத்தில் திரைக்கதையும் வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை. அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.” 

”ஒருவேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன். உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒருவேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன், நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow