வேட்பாளராக யாரை நிறுத்துவது, பட்டியலை உடனே கொடுங்கல்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

2026 சட்டமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பட்டியலை அளிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். 

வேட்பாளராக யாரை நிறுத்துவது, பட்டியலை உடனே கொடுங்கல்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு
Edappadi orders district secretaries

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(டிச. 31) நடைபெற்றது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக 80 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 'எஸ்ஐஆர் பணிகளில் அதிமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை, நீக்கப்பட்ட அதிமுகவினரின் வாக்குகள் சேர்க்கப்பட வேண்டும், அதிமுகவினரின் ஒருவரின் வாக்குக்கூட விடுபட்டு விடக்கூடாது, எஸ்ஐஆர் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், ஐடி விங் ஊழியர்கள் தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்' .மேலும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். என பேசினார். 

திமுக ஆட்சியை வீட்டு அனுப்புவார்கள் : ஜெயக்குமார் பேட்டி 

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோதும் கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் இப்போது தேர்தலுக்காக அங்கு சென்று உள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகமே போர்க்களமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குரலெல்லாம் தமிழக அரசுக்கு கேட்கவில்லை.

செவிலியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் கவலைப்படாமலேயே இருந்து வருகிறார். ஆனால் தினந்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆட்சி புதிய ஆண்டில் முடிவுக்கு வரும். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ் நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow