தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயா? எப்போ தெரியுமா?... விலை உச்சத்திற்கு போக காரணம் என்ன?
சென்னை: தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயாக உயரக்கூடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
என்னதான் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. ஒரு சவரன் அரை லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டாலும் அட்சயதிருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த ஆண்டு 14000 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் கூடுதலாக இந்த ஆண்டு தங்கம் விற்பனையாகியுள்ளதாம். அதாவது அட்சய திருதியை நாளில் 22 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். எனவேதான் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.
இந்த நிலையில், தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கூட தொடும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார். தங்கம் விலை கடந்த 2013 ஆம் அண்டு ஒரு கிராம் 1,500 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 12 ஆயிரம் ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஒரு சவரன் 55 ஆயிரம் என்ற அளவுக்கு விலை உயர்ந்து விட்டது.
கடந்த 10 வருடத்தில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் விற்பனையாகும் என்பது பெரிய விஷயமே இல்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு இன்னும் 10 வருசத்தில் ஒரு சவரன் 55 ஆயிரம், 60 ஆயிரத்திற்கு விற்கும் என சொல்லியிருந்தால் தப்பாக சொல்வதாக சொல்லியிருப்பார்கள். 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் வந்து விடும். இன்னும் உயரக் கூட வாய்ப்பு உள்ளது.
பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக தங்கம் விலை உயரும். அதே மாதிரி கோவிட் போன்ற நோய் வந்தால் நாம் கருதுவதை விட அபரிமிதமாக தங்கம் விலை உயரும். இப்போ இருக்கிற நிலைமையை வைத்து பார்த்தால் கூட 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என்பதில் சந்தேகமும் இல்லை.
தங்கம் தொடர்ந்து விலை ஏறி வருவதே மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட காராணமாகும். முதலீடு 5 வருடங்களில் இரட்டிப்பாகும் என்பதால் மக்கள் வாங்குகிறார்கள் என்றும் நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?