திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. ரத்த வெள்ளத்தில் சாய்த்த கும்பல்.. திகிலடித்த திருவிடைமருதூர்
கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது வீட்டில் இருந்து உயிரா? பயிரா என பேப்பரில் மர்மநபர்கள் எழுதி துண்டுச் சீட்டை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பந்தநல்லூர் நெய்குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கண்ணின் சகோதரி கணவனான இவருக்கு கலைவாணன் என்ற மகன் உள்ளார். திமுக பிரமுகரான கலைவாணன் விவசாயமும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு தனது வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்று நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர்.
அப்போது கலைவாணன் முகத்தில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோய் உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலைவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் துறையினர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கலைவாணன் வீட்டில் இருந்த வைக்கோல் போர் கொளுத்திவிட்டு தொடரும் என எழுதப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து 4 முறை புகார் அளித்தும் காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது கலைவாணன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை நடைபெறுவதற்கு முன் கலைவாணன் வீட்டுக்குள் உயிரா? பயிரா என துண்டு சீட்டில் எழுதி மர்மநபர்கள் போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கொலை செய்யப்பட்ட கலைவாணன் வீட்டை சுற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் முகத்தில் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவிடைமருதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?