மழை வெள்ள நிவாரண மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது-மத்திய குழுவினர் பாராட்டு

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை பார்வையிட்டு வருகின்றனர்.

Jan 13, 2024 - 23:44
மழை வெள்ள நிவாரண மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது-மத்திய குழுவினர் பாராட்டு

மழை வெள்ள பாதிப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மத்திய குழு அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட  ஆய்வு செய்த நிலையில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.மேலும் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. 

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மழை வெள்ளம் ஆகியவற்றால்  நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள் பாலங்கள் சாலைகள் என பல பகுதிகள் சேதமடைந்தன.இந்த நிலையில் கடந்த டிசம்பர் 21 ம் தேதி முதற்கட்ட ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தின் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு முதற்கட்ட அறிக்கையையும் மத்திய அரசுக்கு சமர்ப்பித்த நிலையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் குழு  நெல்லை வந்தடைந்தனர்.  

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும்,மழை வெள்ள பாதிப்பு அடைந்த போதும் மழை வெள்ள பாதிப்புக்கு பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் நெல்லை மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதனை தொடர்ந்து மழை வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக சென்று பார்வையிட்டனர்.நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்ட பாலத்தை ஆய்வு செய்தனர் மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து மூன்று நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அப்பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதிகாரிகள் மத்திய குழுவிடம் விளக்கம் அளித்தார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்திய குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்றபோது, “தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என  ஒரு வரியில் சொல்லி சென்றனர். தொடர்ந்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் அதனை சரி செய்யப்பட்ட பணிகளையும் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் செய்த பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow