நாமக்கல்: ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய வடமாநில காதலர்கள்

Nov 18, 2023 - 10:21
Nov 18, 2023 - 11:39
நாமக்கல்: ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய வடமாநில காதலர்கள்

நாமக்கல் அருகே வடமாநில இளம் காதலர்கள் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம், கோரப்பூர் மாவட்டம் காப்புலா பெட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் குரு மாஜி. இவரது மகன் திம்பு மாஜி. பீகார் மாநிலம் ராசித்பூர்  12 வார்டு சேர்ந்தவர் ராஜேஷ்ராம். இவரது மகள் கோமல்குமாரி. 22 வயதான திம்பு மாஜியும், 18 வயதான கோமல்குமாரியும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்தனர்.

இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பேசி பழகி உள்ளனர். நாளடையில் இவர்களின் பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது.மில்லுக்கு அருகில் உள்ள இருக்கும்  தொழிலாளர்கள் குடியிருப்பில்  திம்புவும், கோமலும் தனித்தனியாக தங்கி இருந்தனர். திம்பு மாஜி தனது காதலை பெற்றோரிடம் சொல்லி கோமல்குமாரியைத் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார்.

கோமால்குமாரியும் தங்களது பெற்றோரிடம் தங்கள் காதல் பற்றி சொல்ல விவகாரம் வெடித்திருக்கிறது. ஒடிசா மாப்பிள்ளை வேண்டாம், ஊருக்கு வந்துவிடு என்று கோமல்குமாரிக்கு பெற்றோர் கட்டளையிட்டு இருக்கின்றனர். கோமல்குமாரி தனது நிலையை காதலனிடம் சொல்லி இருக்கிறார். இருவருமே கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். ஊருக்கு போனால் திரும்பி வர முடியாது என்று கோமால்குமாரி காதலன் திம்பு மாஜியிடம் சொல்ல இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் திடீரென மாயமான நிலையில்  இவர்களது நண்பர்கள் ஈரோடு ஜங்ஜனுக்கு போய் 2 பேரையும்  தேடி உள்ளனர். அங்கு காணவில்லை என்பதால் ஊருக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர். இரண்டு நாளாக தேடிய பிறகும் காதலர்கள் கிடைக்கவில்லை. நேற்று மாலை தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் பார்க்கையில்,  குடியிருப்பு மறைவிடத்தில் இருக்கும் மரத்தில் இருவரும் ஒரே  கயிற்றில்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் இருவரது  உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதல் விவகாரத்தில்தான் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸார் இதுபற்றி ' அறியா வயசு. புரியமால் சாவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். ஊருக்கு போனால் திரும்பி வர முடியாது என்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறார்கள். பெற்றவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறோம். வந்தால்தான் முழு விவரங்கள் தெரியும்.' என்று தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow