தூத்துக்குடியில் ஜோராய் நடக்கும் மழைநீர் அரசியல்!

திமுகவும், பாஜகவும் மழைநீர் அரசியலை போட்டி போட்டு செய்து கொண்டிருக்க முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவோ மௌனமாக இருக்கிறது.

Nov 23, 2023 - 13:55
Nov 23, 2023 - 13:56
தூத்துக்குடியில் ஜோராய் நடக்கும் மழைநீர் அரசியல்!

மழை நீரை வைத்து அரசியல் செய்வது அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.தூத்துக்குடி அரசியல்வாதிகள் போட்டி போட்டு மழை நீரை பார்வையிட்டு அரசியல் செய்து வருகிறார்கள்.

தென் மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் இன்று காலையும் பெய்த மழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சின்ன கோவில் வரை ரோடு முழுவதும் ஆற்று வெள்ளம்போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.அதேபோல பூபால்ராயபுரம் பகுதியில் திரும்பிய பக்கம் எல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், அதிகாரிகளுடன் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி, தினசரி காலை முதல் மாலை வரை தேங்கி இருக்கும் மழை தண்ணீரை பார்வையிட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த விஷயத்தில் அக்கா அமைச்சருக்கும், தம்பி மேயருக்கும் போட்டியே நடக்கிறது.இருவரும் மாறி, மாறி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிடுவதோடு மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளையும் கேட்டு  வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தமிழக பாஜக துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா, மழை நீரை பார்வையிடும் பணியில் இறங்கி இருக்கிறார்.இன்று காலை பூபால் ராயபுரம் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள மக்களை சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது.ஆனால் திமுக அரசாங்கம் அந்த நிதியை ஒழுங்காக பயன்படுத்தாமல் இப்படி மழைநீர் தேங்கி விட்டுள்ளது என்று பேசினார்.

திமுகவும், பாஜகவும் மழைநீர் அரசியலை போட்டி போட்டு செய்து கொண்டிருக்க முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவோ மௌனமாக இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow