அரசு உதவி பேராசிரியர் பணி... TRB-க்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு! எப்போது வரை தெரியுமா..?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் என்றழைக்கப்படும் உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Apr 28, 2024 - 17:46
அரசு உதவி பேராசிரியர் பணி...  TRB-க்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு! எப்போது வரை தெரியுமா..?

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என Teachers Recruitment Board (TRB) ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு அரசின் செட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம்  4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களும், இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் அவர்கள் எழுத்துத் தேர்விற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் செட் அல்லது மத்திய அரசின் நெட் தேர்வில் தகுதிப்பெற்றால் மட்டுமே நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வரும், ஜூலை 1 ஆம் தேதிக்குள் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். 

தமிழ் மொழியைப் பாடமாக எடுத்துப் படிக்காமல், பிற மொழி எடுத்துப் படித்தவர்கள், தமிழ்  தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் இந்த தேர்வின் முக்கிய விதி என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow