குரு பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்... திருவாரூர் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...!
குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஆலங்குடியில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேவுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபகவான் கோயிலில் ஆண்டுத்தோறும் குரு பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோயில் நவகிரகங்களில் ஒன்றான குருவுக்கு பரிகார தலமாக கருதப்படுவதால், வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குருபெயர்ச்சியின் போது இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்வதுண்டு.
இந்தாண்டு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மே 1 ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கவுள்ளது. அப்போது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபகவான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
What's Your Reaction?