PBKS vs KKR: 33 ரன்களுக்கு 8 விக்கெட்.. மோசமான தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியினை பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் சார்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டி விட, பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரர்களான பிரபாசிம்ரன் 30 ரன்களும், பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் பெவிலியின் திரும்பி பஞ்சாப் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தனர்.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் வாய்ப்பு:
112 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது KKR அணி. 14 ஓவர்களில் இலக்கைத் துரத்தியிருந்தால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற நிலை இருந்ததால் KKR அணியின் தொடக்க வீரர்கள் இறங்கியதும் மட்டையை சுழற்ற ஆரம்பித்தார்கள். அவர்களின் போதாத நேரம், 2 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது KKR. அஜிங்க்யா ரஹானேவும் ரகுவன்ஷியும் மூன்றாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர்.
எளிதாக வென்றுவிடுவார்கள் என டிவியை ஆப் செய்து விட்டு போனவர்களுக்கு பஞ்சாப் அணி சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. ரஹானே விக்கெட் வீழ்ந்த நொடியிலிருந்து, மேட்ச் முற்றிலும் பஞ்சாப் பக்கம் சாயத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் கேகேஆர் அணி 62/2 என்ற நிலையில் இருந்தது. அதன்பின் சீட்டு கட்டுகள் போல விக்கெட்கள் மளமளவென சரிய, நடப்பு சாம்பியன்கள் வெறும் 33 ரன்களுக்கு அடுத்த 8 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து, இறுதியில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.
வெற்றிக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “ஐபிஎல்லில் நான் பெற்ற சிறந்த வெற்றி இது” என்றார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வாகினார்.
What's Your Reaction?






