கை குழந்தையோடு 4 கிலோ தங்கம்.. மலேசியாவில் இருந்து சென்னை வந்த தம்பதி.. மடக்கி பிடித்த போலீஸ்

May 8, 2024 - 17:33
கை குழந்தையோடு 4 கிலோ தங்கம்.. மலேசியாவில் இருந்து சென்னை வந்த தம்பதி.. மடக்கி பிடித்த போலீஸ்

மலேசியா நாட்டில் இருந்து உள்ளாடைகளுக்குள் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்ததாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், இன்று (08-05-2024) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அத்துறையின் தனிப்படை பிரிவினர், விமான நிலையத்திற்கு வந்து பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் 2 தம்பதிகள், 2 குழந்தைகளுடன் வந்தனர். வெளியே வந்த அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த அதிகாரிகளிடம் தம்பதியினர், தாங்கள் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்றதாகவும், தற்போது வேலை பிடிக்காததால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். பின்னர் அடுத்தடுத்த கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது.

இதனால் அதிகாரிகள், அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அதில் ஏதும் இல்லாததால், அவர்களை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது 4 பேரும் அவர்களின் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்கம் வீதம், மொத்தம் 4 கிலோ தங்கம் என ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த  அதிகாரிகள், தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்து, தியாகராயநகரில் உள்ள மத்திய வருவாய் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த குஜராத் மாநில தம்பதியினர் கடத்தல் தங்கத்தை சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர்? இவர்கள் ஏற்கனவே தங்கக் கடத்தலில் ஏதும் ஈடுபட்டிருக்கிறார்களா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow