தண்டவாளத்தை கடக்க முயற்சி.. ரயில் மோதி பலியான நால்வர்.. தாம்பரம், திருவள்ளூரில் சோகம்

சென்னை மற்றும் திருவள்ளூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு பேர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே நால்வரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 4, 2024 - 11:14
தண்டவாளத்தை கடக்க முயற்சி.. ரயில் மோதி பலியான நால்வர்.. தாம்பரம், திருவள்ளூரில் சோகம்

சென்னை குரோம்பேட்டை நேரு நகரை சேர்ந்தவர் பிரணவ்(23), அசோக் நகர் 3வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் சாணிடரியம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ரயில்வே கேட்டை இன்று காலையில் கடக்க முயன்றுள்ளனர். அப்போது அசாமில் இருந்து தாம்பரம் வரை செல்லும் விரைவு ரயில் இருவர் மீதும் மோதியது. தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய தாம்பரம் ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் பெயிண்டிங் வேலை செய்து வரும் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.  சேலத்தில் இருந்து தச்சூர் கூட்ரோடு பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக நான்கு பேர் வந்துள்ளனர். வேலை முடித்து சொந்த ஊருக்கு செல்ல பொன்னேரி ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிய அவர்கள், சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்தனர். 

இதில் சேகர் (40) மற்றும் சுப்பிரமணி (50), ஆகிய இருவரும் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளனர். அப்போது எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் நோக்கி சென்ற டாடாநகர் விரைவு ரயில் மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில்  நான்கு பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow